Star25a. மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் --- பாலா SPECIAL *மீள்பதிவு*
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
இப்படித் தான் வைரமுத்து, மெட்டி ஒலியை 'மெகா' பாரதம் என்று மெட்டி ஒலியின் முடிவு விழா உரையில் வர்ணித்தார் ! அதற்கு, எப்படி இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் பல அழகான கிளைக்கதைகளின் தொகுப்போ, அவ்வாறே மெட்டிஒலியும் என்று ஒப்பிட்டுக் கூறினார். மெட்டிஒலி ஏறக்குறைய 811 episodes (அதாவது, 162 வாரங்கள் !) கொண்ட ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் நான் ஒரு 150 episodes தான் பார்த்திருப்பேன் ! இருந்தும் எனக்கு கதையை புரிந்து கொள்வதில் ஒருபோதும் பிரச்சினை இருந்ததில்லை !!!!!
மெட்டிஒலி பலரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆனது. தொடரின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மக்கள் பிரச்சினைகள் ஆயின ! இத்தொடரின் பத்து எபிஸோடுகளையாவது பார்க்காதவர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று அடித்துக் கூறலாம். அவ்வளவு பிரபலம் அடைந்தது !
யதார்த்தமான மற்றும் தரையைத் தொடும் (down-to-earth !) கதையமைப்பு மெட்டிஒலிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனாலும், சரோ கதாபாத்திரம் வாயிலாக பெண்ணடிமைத்தனத்தையும், ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் கொடூரத்தையும் இவ்வளவு அதிகபட்சமாக காட்டியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ! தொடரில் வரும் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரம் பிரச்சினை இல்லாமல் இருந்த நாளே கிடையாது எனலாம். ஆனாலும் அவர் வெளிப்படுத்தும் சீர் தூக்கி நோக்கும் குணமும், மன உறுதியும் அலாதியானது. டெல்லி குமார் இவ்வேடத்தில் வாழ்ந்திருந்தார் என்று கூறலாம்.
மெட்டி ஒலி குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே ஆன கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, தொடரில் வரும் பல நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.
மெட்டி ஏற்படுத்திய ஒலியால், ஒன்பது மனிக்கு வேலையிலிருந்து பசியோடு வீடு திரும்பும் கணவன்மார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர் ! தாய்மார்கள் அழும் குழந்தைகளை மெட்டிஒலி தொடங்குவதற்கு முன்பே உணவு கொடுத்து உறங்க வைத்தார்கள் ! கூட்டுக் குடும்பங்களில் வாழும் இளம்தம்பதியினருக்கு கொஞ்சிப் பேச அவகாசம் கிடைத்தது ! ஊர் சுற்றி விட்டு வரும் பிள்ளைகள் மெட்டிஒலி சமயத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் நைசாக வீட்டுக்குள் நுழைய வழி ஏற்பட்டது. நகரின் ஒதுக்குப்புற வீடுகளில் திருடர்கள் தங்கள் கை வண்ணத்தை காட்ட வழி ஏற்பட்டது !
மெட்டிஒலி பார்த்த சில கணவர்கள் தாங்கள் ரவி மற்றும் மாணிக்கம் (கதாபாத்திரங்கள்!) போல் அவ்வளவு மோசமாக இல்லை என்று உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தனர். சிலர் கோபியும் தங்களை போல் ஒரு பெண்டாட்டி தாசன் என்று சிலாகித்தனர். இன்னும் சிலர், போஸ் போல தங்களது மனைவிகளை விட்டு எகிற முடியலையே என்று ஆதங்கப்பட்டனர். சில மாமியார்கள் ராஜம்மாவை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று மருமகள்களிடம் சுட்டிக் காட்டினர். சில பெண்கள் தாங்கள் தனம் போல வாயாடியாகவும், செல்வத்தின் மனைவி போல் ஓடுகாலியாகவும், கோபியின் வீட்டுப் பெண்கள் போல வம்படிப்பவர்களாகவும் இல்லை என்று ஆறுதல் அடைந்தனர்.
மெட்டிஒலியால் சில நேர்மறை விளைவுகளும் உண்டு ! மெட்டிஒலி பார்த்து, செல்வம் போல் ஒரு நல்லதம்பி இல்லையே என்று எண்ணிய அண்ணன்மார்களும், சிதம்பரம் போல் ஒரு பாசமிகு தந்தை இல்லையே என்று நினைத்த மகள்களும், போஸ் போல பாசமான மருமகன் இல்லையே என்றெண்ணிய மாமன்களும், ரவியின் தந்தை போல மாமனார் இல்லையே என்று நினைத்த மருமகள்களும் நிச்சயமாக உண்டு ! கணவனிடம் அல்லல்பட்டு, சொந்தக்காலில் நின்ற லீலாவையும், கணவனால் கைவிடப்பட்டும் வாழ்வை துணிந்து எதிர்கொண்ட நிர்மலாவையும் பார்த்து தன்னம்பிக்கை பெற்ற பெண்களும் இருப்பர்.
இந்த மெகா காவியத்தை ஒருவர் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் (back to back !) பார்ப்பதன் வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையே படைத்து விடலாம் ! ஒரு எபிஸோட் 20 நிமிடங்கள் (விளம்பர இடைவேளை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டால் கூட மெட்டிஒலியை (இடைவெளியே இல்லாமல்) முழுதும் பார்த்து முடிக்க, 16220 நிமிடங்கள் அல்லது 270 மணிநேரம் அல்லது 11 நாட்கள் ஆகும் !!!
முன்பு சன் டிவியில் "சித்தி" தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, பொதுவாக, அது தொடங்கும் நேரம் தான் நான் பணியிலிருந்து வீடு திரும்புவேன். என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே, உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்.
என்றென்றும் அன்புடன்
பாலா
**************************************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:
Mookku Sundar said...
//என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! //
வீட்டுக்கு வீடு வாசப்படி...:-)
அசத்தல் போங்கோ. !
10:39 PM, June 20, 2005
லதா said...
//உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" //
சித்தியைக் கூடத் தத்து எடுத்துக்கொள்ள முடியுமா ? :-))
3:15 AM, June 21, 2005
-L-L-D-a-s-u said...
//தரையைத் தொடும் (down-to-earth !) //
ஆஹாஹ்ஹா
4:32 AM, June 21, 2005
பினாத்தல் சுரேஷ் said...
டிவி மெகாத்தொடர் என்பதனாலேயே கிண்டல் அடிக்க பலர் காத்திருக்க, அது ஒன்றும் அப்படித் தீண்டத்தகாத வஸ்து அல்ல எனும் பார்வையோடு எழுதப்பட்ட நல்ல நேர்மையான அலசல் பாலா.
தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை - குறிப்பாக, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற ரவி கதாபாத்திரத்துக்கு மற்றவர்கள் செய்யும் அட்வைஸ், பெண்கள் படித்து வேலைக்குச் செல்வதால் கிடைக்கும்
சுயமரியாதை பற்றிய விவாதங்கள்..
நிச்சயமாக ஒரு நல்ல தொடர்.
9:26 AM, June 21, 2005
அன்பு said...
அருமையா எழுதியிருக்கீங்க பாலா... ஒரு சிலர் மெட்டிஒலியத்திட்டினா கைதட்ட ஆளுவருவாங்கன்னு எழுதிட்டுருக்கும்போது - உங்களுடைய பார்வையில் எழுதியதற்கு நன்றி. இங்கு சிங்கையில் இரவு 10 மணியிலுருந்து 11:30க்கு மாற்றிய பின்னாலும்கூட வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம் - பல நாட்கள் பதிந்துவைத்து...
உண்மையில் யார் எத்தனை குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதற்கும் மேல் மெட்டிஒலி ஒரு அருமையான தொடர். இப்போது வரும் பெரும்பாலான அடிதடி திரைப்படங்களுக்கு அந்த தொடர் எவ்வளவோ மேல்... எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!
மீண்டும் நன்றி.
11:36 AM, June 21, 2005
enRenRum-anbudan.BALA said...
சுந்தர், அன்பு, சுரேஷ்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !
லதா, தாஸ், மூக்கர்,
உங்கள் நக்கல்S-ஐ ரசித்தேன் ;-)
அன்பு,
//எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!
//
என் மகளுக்கும் (மூன்றரை வயது!) தான் :)
சுரேஷ்,
//தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும்
என்பதில் ஐயமில்லை
//
நிச்சயமாக, ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
8:39 PM, June 21, 2005
வீ. எம் said...
பாலா,
நல்ல அலசல்.நான் மெட்டி ஒலி பற்றி ஒரு சின்ன அலசல் போட்டேன் போன வாரம் , பார்த்தீர்களா?
தங்களையுடையது அதை விட ஆழமான அலசல்..வாழ்த்துக்கள்!!
//"அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே,//
// உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்//
உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)
வீ எம்
12:39 PM, June 22, 2005
enRenRum-anbudan.BALA said...
வீ.எம்,
அலுவலகத்தில் பரபரப்பான (அழுத்தம் தரும்!) வேலைகளுக்கு நடுவே, உங்கள் பாராட்டு ஓர் உற்சாகத்தை தந்தது. அதற்கு என் நன்றி :)
தங்களது மெட்டிஒலிலிலிலிலிலிலி(!!!) பதிவைப் படித்தேன். நல்ல பதிவு.
//உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)
//
இதைக் கேட்டு எனக்கு வருத்தம்(!) ஏற்பட்டாலும் என் மனவி மகிழ்ச்சி அடைவார் என எண்ணுகிறேன் ;-)
எ.அ. பாலா
3:21 PM, June 22, 2005
Anonymous said...
Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai.
http://thatstamil.indiainfo.com/news/2005/06/22/suicide.html
3:36 PM, June 22, 2005
பினாத்தல் சுரேஷ் said...
Anon Says: //Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai//
While this has to be condemned, what the serial directors or the TV can do to avert this! Much as the paalabishegam cases in Cinema.. Oorukku oru paithiyam irukku -- may be this was her ambition, get a death which is dicussed..
9:39 PM, June 22, 2005
PositiveRAMA said...
பாலா! சூப்பர் விமர்சனம்ங்க!
11:19 AM, June 23, 2005
Anonymous said...
positiverama,
Thanks for the appreciation !
---BALA
11:34 PM, June 23, 2005
***********************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
3 மறுமொழிகள்:
162 வாரங்களில் 150 வாரங்கள்தான் பார்த்தீர்களா? :-))
10 வாரங்கள் மட்டும் பார்த்தால் கூட கதையை புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக இருந்தது.
பொதுவாக நான் மெகா சீரியல்களை அவ்வளவாக ரசிப்பது இல்லை. ஆனால் திருமுருகனின் திறமைக்கு இந்த சீரியல் நல்லதொரு அத்தாட்சி. அவர் நடிப்பு கல்லூரியில் இயக்குநர் படிப்பில் தங்க பதக்கம் எல்லாம் பெற்றவர் என்பது அப்புறம்தான் தெரிந்தது. நல்ல எதார்த்தமான கதைக் களன் மற்றும் இயக்கம்.
இந்த கதையின் தாக்கம் எந்த வரையில் இருந்தது என்றால் திருமுருகனின் திருமணம் போது அவருடைய சீரியல் ஜோடியை (விஜி கதாபாத்திரத்தில் நடித்த) திருமணத்திற்க்கு வந்தவர்கள் துக்கம் விசாரிக்காத குறை. :-))
sridhar venkat,
கருத்துக்கு நன்றி.
நான் 811 எபிசோடுகளில் 150 எபிசோடுகள் பார்த்ததாகத் தான் கூறினேன், 150 வாரங்கள் அல்ல :)
மெட்டி ஒலி எனக்குப் பிடித்திருந்தது.
எ.அ.பாலா
நல்ல அலசல் பாலா ....
Post a Comment